செய்திகள்

மருத்துவக்கழிவுகளை குப்பைத்தொட்டியில் கொட்டிய தனியார் ஆஸ்பத்திரிக்கு அபராதம்

Published On 2018-05-16 17:05 GMT   |   Update On 2018-05-16 17:05 GMT
ஈரோட்டில் மருத்துவக்கழிவுகளை குப்பைத்தொட்டியில் கொட்டிய தனியார் ஆஸ்பத்திரிக்கு அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோடு:

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வீதிகளில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் மருத்துவக்கழிவுகளை கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில தனியார் ஆஸ்பத்திரிகளின் மருத்துவ கழிவுகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டப்படுவதாக ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. எனவே மருத்துவக்கழிவுகளை குப்பையில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் ஈரோடு பெரியார்நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நேற்று காலை ரோந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய உத்தரவின்பேரில் நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அங்கு மருந்து பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஊசி உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் கிடந்தன. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நடவடிக்கை எடுத்தார். மேலும், குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளும் அகற்றப்பட்டது.

ஆஸ்பத்திரிகளில் இருந்து மருத்துவ கழிவுகள் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 
Tags:    

Similar News