செய்திகள்

சுற்றுலா தலமாக மாறிய கிருஷ்ணா கால்வாய் - பொது மக்கள் உற்சாக குளியல்

Published On 2018-05-16 12:31 IST   |   Update On 2018-05-16 12:31:00 IST
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் தண்ணீர் கிருஷ்ணா கால்வாய் வழியாக நதி போல் பாய்ந்து செல்கிறது. இதனால், பொதுமக்கள் உற்சாக குளியலிடுவதால் கிருஷ்ணா கால்வாய் சுற்றுலா தலம் போல் தெரிகிறது.
ஸ்ரீபெரும்புதூர்:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீர் தேவைப்படும் போது செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து கடந்த மாதம் 22-ந் தேதி முதல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கடந்த 20 நாட்களுக்கு மேலாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நிலவரப்படி 290 கனஅடி வருகிறது.

இந்த தண்ணீர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நதி போல் பாய்ந்து செல்கிறது.

இதனை காணும் நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கிருஷ்ணா கால்வாயில் குழந்தைகளுடன் உற்சாக குளியல் போடுகிறார்கள்.

இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் கால்வாயில் பாயும் தண்ணீரை பார்க்கவும், குளியல் போடவும் கிருஷ்ணா கால்வாயில் திரண்டு வருகிறார்கள். இதனால் அப்போது சுற்றுலா தளம் போல் காட்சி அளிக்கிறது.

இதுபற்றி பொது மக்கள் கூறும்போது, ‘‘கிருஷ்ணா கால்வாயில் பாயும் தண்ணீரை பார்க்க ரம்மியமாக உள்ளது. வெயிலுக்கு இதமாக குளிக்கும் போது உற்சாகம் அளிக்கிறது. கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்லாததால் குடும்பத்துடன் பாதுகாப்பாக குளிக்க முடிகிறது’’ என்றனர்.

பூண்டி ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் 1305 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. சென்னை குடிநீர் தேவைக்காக 114 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

பூண்டி ஏரியில் 196 மி.கனஅடியும் (மொத்த கொள்ளளவு 3231), சோழவரம் ஏரியில் 70 மி.கனஅடியும் (மொத்த கொள்ளளவு 1081), புழல் ஏரியில் 1623 மி.கனஅடியும் (மொத்த கொள்ளளவு 3300) தண்ணீர் இருப்பு உள்ளது.
Tags:    

Similar News