செய்திகள்

திருத்தணி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

Published On 2018-05-16 06:30 GMT   |   Update On 2018-05-16 06:30 GMT
திருத்தணி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

பள்ளிப்பட்டு:

திருத்தணியை அடுத்த பூனிமாங்காடு கிராமத்தில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வயல்வெளியில் உள்ள கிணற்று நீரை பிடித்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதனால் கிராம மக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

குடிநீர் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை நல்லாத்தூர் - திருத்தணி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர். மறியல் நடந்து கொண்டிருந்த போது மேகலா என்பவர் மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை மீட்டு குனிமாங்காடில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தகவல் அறிந்ததும் தாசில்தார் நரசிம்மன், டி.எஸ்.பி. சேகர், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News