செய்திகள்

கடலூரில் மீனவர்கள் மோதல் - ஒருவர் வெட்டிக்கொலை

Published On 2018-05-15 07:34 GMT   |   Update On 2018-05-15 07:34 GMT
கடலூரில் மீனவர்கள் மோதலில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்:

தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் நடந்து வருகிறது. மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. பைபர் படகு மூலம் மட்டும் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், சோனாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே பைபர் படகில் சென்று மீன்பிடிப்பது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

இதனால் அந்த 2 பகுதி மீனவர்களுக்கிடைய முன்விரோதம் இருந்து வருகிறது. இன்று காலை தேவனாம் பட்டினத்தை சேர்ந்த 150 மீனவர்கள் அரிவாள், கடப்பாறை, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து சோனாங்குப்பத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பயங்கர ஆயுதங்களுடன் ஊர்வலமாக செல்லக் கூடாது என்றனர்.

இதனால் போலீசாருக்கும், தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


அப்போது தேவனாம்பட்டினம் மீனவர்களில் 15 பேர் தடையை மீறி திடீரென சோனாங்குப்பத்துக்கு அரிவாளுடன் சென்றனர். அங்கு வெளியில் நின்று கொண்டிருந்த சோனாங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன்(65), மற்றும் பாண்டியன்(58) ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த தாக்குதலில் பஞ்சநாதன், பாண்டியன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பஞ்சநாதன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். பாண்டியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையடுத்து சோனாங்குப்பத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் தேவனாம்பட்டினத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அரிவாளால் வெட்டி விட்டு தப்பிஓடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews

Tags:    

Similar News