செய்திகள்

சங்கரன்கோவிலில் வேலை நிறுத்தம் - விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி

Published On 2018-05-15 03:31 GMT   |   Update On 2018-05-15 03:31 GMT
சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பிரச்சினை தொடர்பாக நெல்லை தொழிலாளர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதால் மீண்டும் 18-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
நெல்லை:

விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீதம் கூலி உயர்வு கேட்டும், ரூ.300 விடுமுறை கால சம்பளம் கேட்டும் சங்கரன்கோவிலில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் சுப்புலாபுரம் கிராம பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களும் கூலி உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். இதனால் பல கோடி ரூபாய் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கூலி உயர்வு தொடர்பான 2-வது கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை பாளையங்கோட்டை திருமால்நகரில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தொழிலாளர் துறை உதவி ஆணையர் அப்துல் காதர் சுபைர் தலைமை தாங்கினார். தொழிற்சங்கம் சார்பில் சி.ஐ.டி.யு. விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மாடசாமி, செயலாளர் ரத்தினவேலு, துணை செயலாளர் மாணிக்கம், புளியங்குடி விசைத்தறி தொழிலாளர் சங்க செயலாளர் வேலு, விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் சங்க தலைவர் ஆர்.ஆர்.சுப்பிரமணியன், செயலாளர் பி.எஸ்.ஏ. சுப்பிரமணியன், பொருளாளர் முத்துசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் சார்பில் 60 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் 2014-15 ஆண்டுக்கான அடிப்படை கூலிதான் தரமுடியும் என்றும், அரசு நிர்ணயம் செய்த கூலியை வழங்க முடியாது என்று விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் கூறினர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல், தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து இது தொடர்பான 3-வது கட்ட பேச்சுவார்த்தையை வருகிற 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். 
Tags:    

Similar News