செய்திகள்

கிரண்பேடி கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: நாராயணசாமி வலியுறுத்தல்

Published On 2018-05-09 11:45 GMT   |   Update On 2018-05-09 11:45 GMT
மத்திய அரசின் நம்பிக்கையை இழந்ததால் கிரண்பேடி கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வர் நாராணயசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை கவர்னருக்கு என தனியாக அதிகாரம் கிடையாது. அவர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. அமைச்சரவையின் பரிந்துரைகளையே அவர் ஏற்க வேண்டும் என நான் பலமுறை கூறியுள்ளேன்.

இதுதொடர்பாக கவர்னருக்கு கடிதமும் அனுப்பி உள்ளேன். இருப்பினும் கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து அதிகாரிகளை அழைத்து பேசுவது, அவர்களுக்கு நேரிடையாக உத்தரவிடுவதும், தன்னுடைய முடிவை செயல்படுத்தும்படி வலியுறுத்தியும் வருகிறார்.

வாரிய தலைவர்களை மாநில அரசு நியமனம் செய்ய பரிந்துரை செய்த போது அதற்கு தடை ஏற்படுத்தினார். அப்போது மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு வாரிய தலைவர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என கூறியது. இதையடுத்து வாரிய தலைவர்களுக்கு சில நிபந்தனைகளை கவர்னர் விதித்தார். நிபந்தனைகளை விதிக்க கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. இது சம்பந்தமாகவும் மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பினேன்.

தற்போது மத்திய உள்துறை வாரிய தலைவர்கள் தங்களுடைய வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் வாரிய தலைவர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் விளக்கமளித்துள்ளது.

ஏற்கனவே விவசாயிகள் கடன் ரத்து கோப்புக்கு அனுமதி அளிக்காமல் கவர்னர் அலைகழித்தார். இது தொடர்பாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினோம். இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் விவசாயிகள் கடனை ரத்து செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆக இதுவரை 3 முறை கவர்னரின் முடிவுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதன் பிறகும் கவர்னராக கிரண்பேடி பதவியில் தொடர்வதா? என்பது குறித்து கிரண்பேடிதான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசின் நம்பிக்கையை இழந்த பிறகு கவர்னராக கிரண்பேடி தொடர்வதா?.

சமீபத்தில் கூட டெல்லி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் கிரண்பேடி தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News