செய்திகள்

குழந்தை கடத்தல் பீதி: வடமாநில வாலிபர்களை தாக்கினால் நடவடிக்கை- போலீஸ் எச்சரிக்கை

Published On 2018-05-08 13:56 IST   |   Update On 2018-05-08 13:56:00 IST
காஞ்சீபுரத்தில் குழந்தை கடத்தும் கும்பல் பீதியால் வடமாநில வாலிபர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில் அவர்களை தாக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகளை கடத்தும் வட மாநில கும்பல் பதுங்கி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

இதனால் சந்தேகத்திற்கிடமான வடமாநில வாலிபர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்து உள்ளது.

நேற்று முன்தினம் காஞ்சீபுரத்தில் 2 இடங்களில் வட மாநில வாலிபர்கள் தாக்கப்பட்டனர். இதே போல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலும் தாக்குதல் நடந்தது.

குழந்தை கடத்தும் கும்பல் பீதியால் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடும் அடையாளம் தெரியாத அப்பாவி மக்களை கடத்தல் காரர்கள் என நினைத்து தாக்குவது சமீபகாலமாக நடந்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் வட மாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துவதாகவும் மற்றும் திருட வந்திருப்பதாகவும் வெளியான செய்திகளை அடுத்து பொதுமக்கள் இவ்வாறு ஆவேசமடைந்து சந்தேக நபர்களை தாக்குவதினால் அவர்கள் பலத்த காயமடைந்து உயிர்சேதம் ஏற்படக்கூடிய நிலைக்கு ஆளாகின்றனர்.

இத்தகைய செயலினால் அப்பாவி பொதுமக்களும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படுவதுடன், தாக்குதல் நடத்தும் பொது மக்களும் சட்டபூர்வ நடவடிக்கைக்கு ஆளாகும் நிலை ஏற்படும்.

எனவே பொதுமக்கள் சந்தேகமான நபர்கள் யாரையாவது கண்டாலோ அல்லது பிடித்தாலோ அவர்களை தாக்கி காயப்படுத்தாமல் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது.

காஞ்சீபுரம் உட்கோட்டம் செல் நம்பர் 9498100261, 044-27234184, 27233100, ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் செல் நம்பர் 9498100262, 044-27162202, செங்கல்பட்டு உட்கோட்டம் செல் நம்பர் 9498100263, 044-27431424, மதுராந்தகம் உட்கோட்டம் செல் நம்பர் 9498100264, 044-27553180, மாமல்லபுரம் உட்கோட்டம் செல் நம்பர் 9498100265, 044-27442100, வண்டலூர் உட்கோட்டம் செல் நம்பர் 9498100306, 044-27462133, போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 044-27222000, 27222100, காஞ்சீபுரம் தனிப்பிரிவு அலுவலகம் 044-27238001 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இந்த எண்களில் தொடர்பு கொண்டால், போலீசார் உடனடியாக அங்கு வந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள். இதன் மூலம் பொது மக்களும் தங்களது கடமையை செய்வதுடன் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது அல்லது தாக்கப்படுவது தவிர்க்கப்படும்.

இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதி மானி தெரிவித்துள்ளார்.

மாவட்டம் முழுவதும் கிராமங்களில் போலீசார் ஆட்டோக்களில் சென்று பொதுமக்களுக்கு இதே கருத்தினை வேண்டுகோள் விடுக்கும் வகையில் ஆட்டோ மூலம் தெரிவித்து வருகின்றனர். #tamilnews

Similar News