செய்திகள்

கல்பாக்கம் அணுமின்நிலைய விஞ்ஞானி கொலையில் 4 பேர் கைது

Published On 2018-05-08 12:38 IST   |   Update On 2018-05-08 12:38:00 IST
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாமல்லபுரம்:

கல்பாக்கம் அடுத்த வாயலூர் பாரத் நகரில் வசித்து வந்தவர் பாபுராவ் பட்டேல் (வயது 61). கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அணு ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதி வீட்டில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீட்டில் இருந்த நகை, சிலிண்டர், லேப்டாப், கம்ப்யூட்டர் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். ஆனால் அவர்கள் பற்றிய எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது.

இந்த நிலையில் பெண் ஒருவர் கல்பாக்கத்தில் தனது செல்போன் திருடு போனதாகவும், அதை ஒருவர் பயன்படுத்தி வருவதாகவும் சதுரங்கபட்டினம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் அந்த செல்போன் நம்பரை கண்காணித்து அதனை பயன்படுத்திய புதுப்பட்டினத்தை சேர்ந்த விஜய் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கடந்த 2016-ம் ஆண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து அணுமின் நிலைய விஞ்ஞானி பாபுராவ் பட்டேலை கொலை செய்து அவரது வீட்டில் கொள்ளையடித்ததாகவும், மேலும் பல வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கூட்டாளிகளான புதுப்பட்டினம் முபாரக்அலி, பூந்தண்டலம் பாலா, மற்றும் ஒருவரை கைது செய்தனர். கைதான 4 பேரும் திருக்கழுகுன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். #Tamilnews

Similar News