செய்திகள்

கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் ஆஜரான வக்கீல் வீட்டில் போலீஸ் சோதனை

Published On 2018-05-06 16:16 IST   |   Update On 2018-05-06 16:16:00 IST
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிப்படைந்தவர்கள் குடும்பத்தினர் சார்பில் ஆஜரான வக்கீல் இழப்பீடு தொகை பெறுவதில் முறைகேடு செய்த புகாரால் போலீசார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
தாம்பரம்:

கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் 94 மாணவ- மாணவிகள் உடல் கருகி இறந்தனர். பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரு.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை இழப்பீடு வழங்க கமிட்டி பரிந்துரை செய்து இருந்தது. பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் கிழக்கு தாம்பரம், விஜயரங்கன் தெருவில் வசித்து வரும் வக்கீல் தமிழரசன் ஆஜராகி வந்தார்.

இதற்கிடையே இழப்பீடு தொகை தங்களுக்கு முறையாக வந்து சேரவில்லை என்றும், தங்களுக்காக வாதாடிய வக்கீல் தமிழரசன் முறைகேடாக எடுத்துக் கொண்டதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் கிழக்கு தாம்பரத்தில் உள்ள வக்கீல் தமிழரசன் வீட்டுக்கு இன்று காலை 7 மணியளவில் தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி போலீஸ் டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையில் 14 அதிகாரிகள் வந்தனர்.

அப்போது தமிழரசனின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. தமிழரசன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து பக்கத்து வீட்டில் வசிப்பவரிடம் கொடுத்து இருந்த வீட்டின் சாவியை வாங்கி அதிகாரிகள் தமிழரசன் வீட்டுக்குள் சென்றனர். அங்கு சோதனை நடத்தினர்.

கும்பகோணம் பள்ளி தீவிபத்து இழப்பீடு தொகையில் முறைகேடு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வக்கீல் தமிழரசன் வீட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இன்று மதியம் வரை இந்த சோதனை நீடித்தது.

Similar News