செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு நிவாரணம் முறையாக வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

Published On 2018-05-05 02:21 IST   |   Update On 2018-05-05 02:21:00 IST
அனைத்து விவசாயிகளுக்கும் சரியான நேரத்தில் பயிர்க்காப்பீட்டு நிவாரணம் கிடைத்திட தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார். #Vaiko
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள், இயற்கைச் சீற்றங்களாலும், கொடிய வறட்சியாலும் தாங்கள் பயிரிடும் பயிருக்கு உரிய விளைச்சல் கிடைக்காத காலங்களிலும், பயிரிட்ட நிலையிலேயே முழுமையான வருவாய் இழப்பிற்கு ஆளாகும் காலங்களிலும் அவர்களை நட்டத்தில் இருந்து சிறிதேனும் பாதுகாக்க பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும், கணக்கிடுவதிலும், நிவாரணத் தொகை வழங்குவதிலும் எண்ணற்ற குறைபாடுகள் விவசாயிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றன. தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உளுந்து, பாசி பயிரிட்டு வறட்சியால் வருவாய் இழந்த பிரிவினரில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் காப்பீட்டு பிரிமியம் செலுத்தியவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படுவதாகவும், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் மூலம் பிரிமியம் செலுத்தியவர்களுக்கு இன்னும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகள் பெருங்கவலையுடன் உள்ளனர். அனைத்து விவசாயிகளுக்கும் சரியான நேரத்தில் பயிர்க்காப்பீட்டு நிவாரணம் கிடைத்திட தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.  #Vaiko

Similar News