செய்திகள்

மோடியின் பயண திட்டம் முன்கூட்டியே வெளியானது எப்படி? சி.பி.சி.ஐ.டி. விசாரணை

Published On 2018-05-03 04:35 GMT   |   Update On 2018-05-03 04:35 GMT
சென்னைக்கு வந்தபோது மோடியின் பயண திட்டம் முன்கூட்டியே வெளியானது எப்படி என்பது பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். #DefExpo2018 #Modi
சென்னை:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 12-ந்தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற ராணுவ கண்காட்சியில் பங்கேற்றார்.

முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயண விவரங்கள் எப்போதுமே ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் அதனை வெளியிடாமல் வைத்திருப்பார்கள்.

அதே நேரத்தில் முக்கிய பிரமுகர்களின் வருகைக்கு எதிர்ப்பு இருந்தால் அவர்களின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் மாறுதலுக்குட்பட்டதாகவே இருக்கும். அது வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதில் பாதுகாப்பு அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.



பிரதமர் மோடி மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியில் கலந்து கொண்டு விட்டு அடையாறு புற்றுநோய் மைய நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பிரதமர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி நிரல் முழுவதுமாக வாட்ஸ்-அப்பில் வெளியானது.

பிரதமரின் சென்னை வருகையின் போது காவிரி போராட்டம் தமிழகத்தில் தீவிரமாக இருந்தது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. நிகழ்ச்சி நிரலும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பிரதமரின் சுற்றுப்பயண விவரம் வெளியானது பாதுகாப்பு அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தனர். இதுபோன்ற தகவல்களை வெளியிடுதல் இந்திய அரசியலைப்புக்கு எதிரானது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. பிரதமரின் நிகழ்ச்சி நிரல் வெளியானது எப்படி? என்பது பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். #DefExpo2018 #Modi

Tags:    

Similar News