செய்திகள்

மெரினா கடற்கரை சாலையில் அரை நிர்வாணத்துடன் சென்ற விவசாயி

Published On 2018-05-02 04:17 GMT   |   Update On 2018-05-02 04:17 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மோட்டார் சைக்கிளில் அரை நிர்வாணத்துடன் சென்ற விவசாயியால் மெரினா கடற்கரை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. #CauveryManagementBoard #MarinaBeach
சென்னை:

கும்பகோணத்தை அடுத்த திருச்சேறை பகுதியை சேர்ந்தவர் புண்ணியகுமார்(வயது 48). இவர் சென்னை பழவந்தாங்கலில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்த அவர் விவசாயம் நலிவடைந்ததால் சென்னைக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று புண்ணியகுமார் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பின்பு அவர் திடீரென தனது மேலாடையை களைந்து, கோவணத்துடன் காந்தி சிலை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாயத்தை காக்க வேண்டும் எனக்கூறி அவர் கோஷங்களை எழுப்பியபடி சென்றார்.

கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் இதை கூடி நின்று பார்த்தனர். இதைக்கண்ட போலீசார் காந்தி சிலை அருகே புண்ணியகுமாரை மடக்கிப்பிடித்து மெரினா போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்துவிட்டு அவரை அனுப்பி வைத்தனர். #CauveryManagementBoard #MarinaBeach
Tags:    

Similar News