செய்திகள்

ஆய்வுக்கு கொண்டு வரப்படாத பள்ளி வாகனங்களின் அனுமதி ரத்து செய்யப்படும்- கலெக்டர் அறிவிப்பு

Published On 2018-04-28 14:27 GMT   |   Update On 2018-04-28 14:27 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்ய கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்ய கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வட்டார போக்குவரத்து துறையின் மூலம் பள்ளி வாகனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கடுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடவும், ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க செய்திடவும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனத்தினையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட அனைத்து பள்ளி வாகனங்களை அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி காலை 9 மணிக்கு புதுக்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்திலும், அறந்தாங்கி பகுதி போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட வாகனங்களை அறந்தாங்கி பகுதி அலுவலக வளாகத்திலும், இலுப்பூர் பகுதி அலுவலக எல்லைக்கு உட்பட்ட வாகனங்களை இலுப்பூரில் உள்ள பகுதி அலுவலக வளாகத்திலும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

எனவே ஆய்விற்கு வரும் பள்ளி வாகனங்களோடு அந்த வாகனங்களின் பதிவு சான்று, காப்பு சான்று, அனுமதி சீட்டு, ஓட்டுனர் உரிமம், நடத்துனர் உரிமம் ஆகியவைகளை அரசு சிறப்பு விதிகளின் படி அமைக்கப்பட்ட குழுவின் ஆய்விற்கு மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு மே மாதம் 5-ந் தேதி கொண்டு வருமாறு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி உரிமையாளர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்களின் அனுமதி சீட்டினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News