செய்திகள்
விராலிமலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
விராலிமலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விராலிமலை:
விராலிமலை அருகே உள்ள வாணதிராயன்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் மின்மோட்டாருடன் கூடிய சிறிய குடிநீர் தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் வாணதிராயன்பட்டி பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த வாணதிராயன்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் விராலிமலை செக்போஸ்ட்டில் திருச்சி செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஊராட்சி மன்ற அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.