செய்திகள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந்தேதி கடைசி நாள்

Published On 2018-03-25 08:12 IST   |   Update On 2018-03-25 08:12:00 IST
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். இதையொட்டி வரி செலுத்துபவர்களுக்காக சென்னை, தாம்பரம் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #IncomeTax
சென்னை:

பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் கணக்குகளை தாக்கல் செய்வதை நிறுத்தியவர்கள் குறித்து வருமான வரித்துறை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் அடிப்படையில், வருமான வரி செலுத்தி அதேசமயம், 2016-17 மற்றும் 2017-18-ம் மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யாதவர்களுக்கு, அதை நினைவூட்டும் வகையில், வருமான வரித்துறை கடிதங்களை அனுப்பி இருந்தது.

இந்த கடிதங்களை பெற்ற வருமான வரி செலுத்தியோர், வருமான வரித்துறையிடம் விளக்கம் கேட்டும், வழிகாட்டு உதவி வழிமுறைகளை கோரியும் பதில் அளித்துள்ளனர். அவர்கள் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்வதற்கு வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். வருமான வரி செலுத்தியவர்கள் குறிப்பாக, சுய வேலைவாய்ப்பு அல்லது ஊதியம், ஓய்வூதியம் மூலம் வருமானம் பெறுபவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதை தூண்டும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆயகார் பவன் அலுவலகம், ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். கட்டிடம் மற்றும் மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலையில் செயல்பட்டு வரும் ஆயகார் சேவை மையங்களில் வருகிற 26-ந்தேதி (நாளை) முதல் 31-ந்தேதி வரை காலை 9.15 மணி முதல், மாலை மணி 5.45 வரை வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யலாம்.

வருமான வரி கணக்குகளை வருகிற 31-ந்தேதிக்கு பின்னர் எந்த வகையிலும் தாக்கல் செய்யமுடியாது. மேலும் விவரங்கள் மற்றும் விளக்கங்களை வருமான வரித்துறையின் பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்தை 044-28338014, 044-28338314 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #IncomeTax

Similar News