ஸ்ரீபெரும்புதூர் அருகே வாலிபரை கொன்ற நண்பர்கள் 3 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மொளச்சூர் ஊராட்சியில் சமூதாய கூடம் அருகே மொளச்சூர் கற்பகவள்ளி நகர் பகுதியை சேர்ந்த டென்னி கழுத்து அறுத்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்விக்டர் பிணத்தை கைப்பற்றி விசாரணை செய்தார். செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரூபன், மொளச்சூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அரி ஆகியோரை கைது செய்து விசாரணை செய்தார்.
விசாரணையில் ரூபன் போலீசாரிடம் கூறியதாவது:-
நாங்களும் டென்னியும் நண்பர்கள். அனைவரும் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறோம். இரவில் ஒன்றாக மது அருந்துவோம். சம்பவத்தன்று எங்களிடம் மது அருந்த பணம் இல்லை. டென்னியிடம் பணம் கேட்டோம். அவன் பணம் இல்லை என்று கூறிவிட்டு வேறு நபருடன் மது அருந்தி இருந்தான்.
எங்களுக்கு பணம் தர மறுத்து வேறு நபருடன் மது அருந்துவதை பார்த்த உடன் ஆத்திரத்தில் நானும் எனது நண்பர்கள் வெங்கடேசன், அரி ஆகிய மூவரும் கத்தியால் குத்தி கொலை செய்து தப்பி ஓடிவிட்டோம் என்று கூறினார்.
இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.