விருகம்பாக்கத்தில் தோஷம் கழிப்பதாக கூறி மோசடி- போலி சாமியார்-கூட்டாளி கைது
போரூர்:
விருகம்பாக்கம், சாய் நகரைச் சேர்ந்தவர் ரகுராஜ். கடந்த 16-ந்தேதி காலை இவரது வீட்டிற்கு நான்கு பேர் காரில் வந்தனர்.
அவர்களில் ஒருவர் ரகுராஜிடம் தான் மிகவும் சக்தி வாய்ந்த சாமியார் என்று கூறினார். மேலும், “உங்களது குடும்பத்துக்கு மிகப்பெரிய தோஷம் உள்ளது. அதை போக்கி ஆயுள் விரக்தி அடைய இன்றே ஒரு பரிகார பூஜை செய்ய வேண்டும். இதற்கு ரூ.95 ஆயிரம் செலவு ஆகும்” என்றார்.
இதனை நம்பிய ரகுராஜ் தோஷம் கழிக்க பூஜை செய்ய ஒப்புக் கொண்டார். உடனே சாமியார் உள்பட 4 பேரும் பூஜை பொருட்கள் வாங்க வேண்டும் என கூறி ரூ.5 ஆயிரத்தை ரகுராஜிடம் இருந்து பெற்றுகொண்டு வெளியே சென்றனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பி வரவில்லை.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரகுராஜ் இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வேலுமணி சாய் நகரில் பொருத்தப்பட்டிருந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அப்போது சிகப்பு நிற கார் ஒன்று வந்து சென்றது தெரிந்தது. அந்த காரின் பதிவு எண்ணை வைத்து தலைமறைவான 4 பேரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் விருகம்பாக்கம் நடேசன் நகரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சிகப்பு நிற காரை நிறுத்தி அதில் இருந்த 2 பேரிடம் விசாரித்தனர்.
அவர்கள் போளூரை சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளி ராஜேந்திரன் என்பது தெரிந்தது. பிரகாஷ் போலி சாமியாராக நடித்து ரகுராஜிடம் பணம் பறித்து சென்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து பிரகாஷ், ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3500, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மோசடிக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகளான திருக்கோவிலூரைச் சேர்ந்த கருணாநிதி மற்றும் முருகன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். பிடிபட்டவர்கள் வயதானவர்கள் தங்கி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு தோஷம் இருப்பதாக கூறி பல இடங்களில் நூதன முறையில் பணம் பறித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போலீஸ்காரர்கள் சின்னத்துரை, மகேந்திரபாபு ஆகியோர். ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கிடமான வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவன் தண்டையார்பேட்டை திலகர் நகரை சேர்ந்த கணேஷ் எனபதும் அவன் வைத்திருந்த மூட்டையில் பித்தளை குத்துவிளக்களும் இருந்தன.
இதனை அவர் திருடி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து கணேசை போலீசார் கைது செய்தனர்.