செய்திகள்

மூலக்கொத்தளம் மயானத்தை அகற்றுவதை கண்டித்து ம.தி.மு.க. போராட்டம் - வைகோ அறிக்கை

Published On 2018-03-11 11:08 GMT   |   Update On 2018-03-11 11:08 GMT
மாவீரர்களின் தியாக வரலாறு அடையாள சின்னமாக உள்ள மூலக்கொத்தளம் மயானத்தை அகற்றுவதை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் வருகிற 13-ந்தேதி போராட்டம் நடத்த போவதாக வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மூலக்கொத்தளம் பகுதியில், 20 ஏக்கர் பரப்பில் உள்ள மயானத்தில், உயிர் இழந்தோரின் உடல்கள், கடந்த 120 ஆண்டுகளாக எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வருகின்றது.

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோரின் விடியலுக்காகவும், செந்தமிழ் மொழியின் தனித் தன்மையை, உரிமையைப் பாதுகாக்கவும், சமூக நீதியைக் காக்கவும், சமதர்ம சமுதாயம் காணவும் போராடிய மாவீரர்களின் உடல்கள், இந்த மயானத்தில்தான் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வந்துள்ளன.

இப்படி, நூற்றாண்டு காலத் தமிழர்களின் தியாக வரலாற்றின் அடையாளச் சின்னம்தான் மூலக்கொத்தளம் சுடுகாடு ஆகும்.

மயான பூமியாக மக்கள் பயன்பாட்டில் உள்ள இடத்தில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் கட்டப்போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த மயானத்தைச் சுற்றிப் புதிதாக உருவாகி இருக்கின்ற அடுக்குமாடி வீடுகளில் வசிப்போர், இந்த சுடுகாட்டை அகற்றுவதற்காக, அதிகாரிகளைச் சரிக்கட்டி, ஏன் தமிழக அரசையும் சரிக்கட்டி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளனர்.

மூலக்கொத்தளம் மயானத்தை அகற்ற விடாமல் தடுக்க, ம.தி.மு.க. சார்பில் வருகிற 13-ந்தேதி காலை 10 மணிக்கு துறைமுகத்திற்கு எதிரே, கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில், அரசுக்கு விடும் முதல் எச்சரிக்கையாக அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த அறப்போரில் பங்கேற்க வருமாறு இளைஞர்களை அழைக்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News