செய்திகள்

கோவையில் பிளஸ்-2 தேர்வு எழுதும் 36,833 மாணவ, மாணவிகள்

Published On 2018-02-28 20:31 GMT   |   Update On 2018-03-01 00:00 GMT
கோவை மாவட்டத்தில் 36 ஆயிரத்து 833 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை எழுத உள்ளனர்.
கோவை:

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. கோவை கல்வி மாவட்டத்தில் 86 மையங்களில் 30 ஆயிரத்து 28 பேர், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 27 மையங்களில் 6 ஆயிரத்து 805 பேர் என மொத்தம் 36 ஆயிரத்து 833 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தனித்தேர்வர்களை பொறுத்தவரை கோவை கல்வி மாவட்டத்தில் 7 மையங்களில் 1729 பேரும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் ஒரு மையத்தில் 341 பேரும் என மொத்தம் 2070 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இவர்களுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் 12 தேர்வு ஒருங்கிணைப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இங்கிருந்து 23 வழித்தடங்களில் காலை 6 மணி முதல் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. 20 மாணவர்களுக்கு ஒரு அறை வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர 240 முதன்மை கண்காணிப்பாளர்களும், 220 பேர் தலைமையில் பறக்கும்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், வெளிச்சம், காற்றோட்டம் மற்றும் கழிப்பிட வசதிகளை அமைத்திடவும், தடையற்ற மின்சாரம் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு மைய வளாகத்துக்கு செல்போன் எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களும் தங்களுடன் செல்போனை கண்டிப்பாக எடுத்து வரக் கூடாது. மேலும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் செல்போன் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து நோடல் மையங்களிலும் தேர்வர்களுக்கான விதிமுறைகள், விதிகளை மீறினால் அளிக்கப்படும் தண்டனைகள் குறித்து தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

தேர்வு அறையில் உள்ள மேஜைகள் மற்றும் கரும்பல கையில் மாணவ, மாணவிகளின் விவரங்களை பள்ளி ஆசிரியர்கள் சாக்பீஸ் மூலம் எழுதினர். ஒரு மேஜையில் 2 தேர்வர்கள் அமர்ந்து தேர்வு எழுதும் வகையில் எண்கள் எழுதப்பட்டு இருந்தன.

தேர்வு அறையின் கதவிலும் தேர்வு அறையின் எண்களை பொறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டன. தேர்வு ஏற்பாடுகளை தனி அதிகாரிகள் சரிபார்த்தனர்.

தேர்வு சார்ந்த அனைத்து விதமான புகார்களையும், அறை கண்காணிப்பாளர், நோடல் மைய ஒருங்கிணைப்பு அலுவலர்களிடம் மாணவர்கள் தெரிவிக்கலாம் எனவும், பொதுத்தேர்வு குறித்த புகார்களை 0422-2391062 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News