செய்திகள்

தென் மாநிலத்தைச் சேர்ந்த கவர்னர் மீது செக்ஸ் புகார் - மத்திய அரசு தீவிர விசாரணை

Published On 2018-02-26 13:16 IST   |   Update On 2018-02-26 13:16:00 IST
தென் மாநில கவர்னர் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக மத்திய உள்துறைக்கு பெண் ஊழியர் புகார் கடிதம் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:

தென் மாநிலங்களில் உள்ள கவர்னர்களில் ஒருவர் மீது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சமீபத்தில் ஒரு பரபரப்பு புகார் சென்றது. அந்த புகாரில் கவர்னர் செக்ஸ் லீலையில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது.

கவர்னர் மாளிகையில் உள்ள பெண் ஊழியர்கள் மற்றும் சாதாரண பெண் தொழிலாளர்களிடம் அந்த கவர்னர் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக பெண் ஊழியர்கள் தனது விருப்பப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அந்த கவர்னர் வலியுறுத்துவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

கவர்னரின் செயலால் கவர்னர் மாளிகையின் மாண்பு கெட்டு விட்டதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் கவர்னர் மாளிகை விரைவில் இளம் பெண்களின் கிளப்பாக மாறி விடும் என்றும் மத்திய உள்துறைக்கு அனுப்பப்பட்டுள்ள புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் முதலில் இதை நம்பவில்லை. ஆனால் கவர்னர் மாளிகை பெண் ஊழியர்களிடம் இருந்து மீண்டும் மீண்டும் புகார் கடிதங்கள் வந்ததால் அந்த கவர்னர் செக்ஸ் லீலைகளில் ஈடுபடுகிறாரா? என்பதை கண்டுபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கவர்னர் மாளிகையில் சில பெண்களில் யார் யாரெல்லாம் புகார் தெரிவித்து இருந்தார்களோ அவர்களிடம் முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை முடிவு செய்துள்ளது.

கவர்னர் மீது கூறப்படும் செக்ஸ் புகார்களில் உண்மை இருப்பது தெரிய வந்தால் அவரை ராஜினாமா செய்ய வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளது. அந்த கவர்னர் யார் என்று கேட்டபோது உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

இதற்கு முன்பு மேகாலயா கவர்னராக இருந்த சண்முகநாதன் செக்ஸ் புகார் காரணமாக பதவி விலக நேரிட்டது. அதுபோல 2009-ம் ஆண்டு ஆந்திர கவர்னராக இருந்த என்.டி.திவாரி மீதும் பரபரப்பு செக்ஸ் புகார் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News