செய்திகள்

சீர்காழி அருகே கடற்கரையில் இறந்து ஒதுங்கிய 200 ஆமைகள்

Published On 2018-02-19 13:27 GMT   |   Update On 2018-02-19 13:27 GMT
சீர்காழி அருகே கடற்கரையில் 200-க்கும் மேற்பட்ட ஆலிவ்ரெட்லி ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீர்காழி:

அந்தமான், இலங்கை, ஒரிசா கடல் பகுதியில் காணப்படும் 200 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது ஆலிவ் ரெட்லி ஆமைகள். இவை ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் மார்ச் வரை முட்டையிட நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையார் பகுதி கடற்கரைக்கு வந்து செல்லும்.

அங்கு நள்ளிரவு நேரங்களில் கரையேறி கடற்கரையில் குழி தாண்டி 200 முட்டைகள் வரையிட்டு பின்னர் மீண்டும் குழியை மூடிவிட்டு கடலுக்கு ஆலிவ்ரெட் ஆமைகள் சென்று விடும்.

இந்நிலையில் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் முதல் பழையார் மீனவர் கிராமம் வரை சுமார் 12 கி.மீட்டர் தூரம் கடற்கரையோரம் 200-க்கும் மேற்பட்ட ஆலிவ்ரெட்லி ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இதைப்பார்த்த அப்பகுதி மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் வந்து இறந்து கிடந்த ஆமைகளை பார்வையிட்டனர். அப்போது மீனவர்கள் கூறுகையில்;

இந்த ஆமைகள் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என்றும், இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், எனவே இறந்து கிடக்கும் ஏராளமான ஆமைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் தொடுவாய் கடற்கரையோரம் உள்ள மீன் எண்ணை உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் நேரடியாக கடலில் கலப்பதால் ஆமைகள் இறந்து இருக்கலாம். எனவே ஆமைகள் இறந்தது குறித்து கடற்கரையோரம் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews

Tags:    

Similar News