செய்திகள்

வேதாரண்யம் அருகே பள்ளம் தோண்டிய போது 11 சாமி சிலைகள் கண்டெடுப்பு

Published On 2018-02-19 17:45 IST   |   Update On 2018-02-19 17:45:00 IST
வேதாரண்யம் அருகே கழிவறை கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய போது 11 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பகுதியில் வசிப்பவர் விக்னேஸ்வரன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் மாடி வீடு கட்டி வருகிறார்.

இவர் வீட்டின் பின் பகுதியில் கழிவறை கட்டுவதற்காக ஆட்களை வைத்து நேற்று பள்ளம் தோண்டினார். 7அடிக்கும் கீழ்பள்ளம் தோண்டிய போது சிலை ஒன்று கிடைத்தது. மேலும் தோண்டும் போது ஒன்றன் பின் ஒன்றாக 11 சாமி சிலைகள் கிடைத்தன. சிலைகள் அனைத்தும் 1அடி முதல் 3அடி உயரம் உடையதாக இருந்தது. கண்டெடுக்கப்பட்ட சிலைகளில் ராமர்- லட்சுமணர் உள்ளிட்ட சாமி சிலைகள் உலோகத்தில் செய்யப்பட்டவை ஆகும்.

கண்டெடுக்கப்பட்ட உலோக சிலைகள் பழங்கால சிலைகள் என்றும், பல லட்சம் மதிப்புடையது என்றும் தெரியவந்துள்ளது. அவைகளை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வேதாரண்யம் தாசில்தார் சங்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலைகளை கைப்பற்றி நாகையில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தார். #tamilnews

Similar News