மயிலாடுதுறை கடைத்தெருவில் தனியார் ஓட்டலில் திடீர் தீவிபத்து- மக்கள் அலறியடித்து ஓட்டம்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பட்டமங்கலத் தெரு உள்ளது. இங்கு ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் ஏராளமான கடைகள் அருகருகே நெருக்கமாக அமைந்துள்ளது. இந்த தெருவில் மருத்துவமனையை ஒட்டி ‘பாம்ஸ் ரெசிடென்சி’ என்ற தங்கும் விடுதியுடன் கூடிய உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த உணவு விடுதியின் தரைத்தளத்தில் சமையல் கூடம் இயங்குகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் இந்த சமையல் கூடத்தில் ஊழியர்களின் கவனக்குறைவால் திடீர் என தீப்பற்றியது. உடனடியாக கடை ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லையாம். தீயை அணைப்பதற்கான உபகரணங்கள் கடையில் இருந்ததாக தெரியவில்லை. இந்த தீ விபத்தால் கடும் புகை மூட்டம் சமையல் கூடத்தில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மருத்துவ மனைக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. கடைத் தெருவிலும் புகைமூட்டம் சூழ்ந்தது.
இதனையடுத்து ‘பாம்ஸ் ரெசி டென்சி’யின் மேல் தளங்களில் உள்ள விடுதி அறையில் தங்கியிருந்தவர்கள் மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தவர்கள் இதைக்கண்டு பெரும் அச்சமடைந்தனர்.
பின்னர் வெளியில் வந்து பார்த்தபோது தனியார் விடுதியில் தீப்பற்றியதை கண்டு அச்சத்துடன் விடுதி அறையில் இருந்தும், மருத்துவமனையில் இருந்த நோயாளிகளும் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். இதனையடுத்து பட்டமங்கலத் தெருவில் பெரும் பதட்டமான சூழல் நிலவியது.
தீ விபத்து பற்றி உடனடியாக மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் அனைவரும் நிம்மதியடைந்தனர். இதன் காரணமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது. தனியார் ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்துக்கான காரணம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை பகுதியில் ஏராளமான தனியார் ஓட்டல்கள் உள்ளன. ஆனால் இந்த கடைகளில் அரசு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா? என்று தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து நிறைந்த கடைத்தெருவில் தனியார் ஓட்டலில் கவனக்குறைவாக தீவிபத்து ஏற்பட்டதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதுவே இரவு நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டிருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று கூறினர். #tamilnews