செய்திகள்

காஞ்சீபுரம் வங்கியில் கட்டாயமாக 10 ரூபாய் நாணயங்கள் வழங்குவதால் பென்சன்தாரர்கள் அவதி

Published On 2018-02-06 15:48 IST   |   Update On 2018-02-06 15:48:00 IST
காஞ்சீபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் பென்சன்தாரர்களுக்கு வழங்கப்படும் பணத்தில் ரூபாய் ஆயிரத்திற்கு கட்டாயமாக 10 ரூபாய் நாணயமாக வழங்கி வருவதாக பென்சன்பணம் வாங்கும் வயதானவர்கள் கூறி வருகின்றனர்.

காஞ்சீபுரம்:

10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என சில மாதங்களுக்கு முன்பாக வதந்தி பரவியது. இதனால் வியாபாரிகள் மற்றும் பஸ்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்ததால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

சில வங்கிகளில் டெபாசிட் பணமாக 10 ரூபாய் நாணயங்கள் செலுத்தினாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் காட்சி சமூக வலைத் தளங்களில் பரவியது. தற்போது 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தாலும் பெரும் பாலானோர் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர்.

இந்நிலையில் காஞ்சீபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் பென்சன்தாரர்களுக்கு வழங்கப்படும் பணத்தில் ரூபாய் ஆயிரத்திற்கு கட்டாயமாக 10 ரூபாய் நாணயமாக வழங்கி வருவதாக பென்சன்பணம் வாங்கும் வயதானவர்கள் கூறி வருகின்றனர்.

வயதான பென்சன்தாரர்கள் அதை பெற்றுக்கொண்டு மாற்றுவதில் பல்வேறு பிரச் சினைகளை சந்திக்கிறார்கள். வங்கிகளிடம் கேட்டால் ஏற்கனவே ஏராளமான 10 ரூபாய் நாணயங்கள் உள்ளது. அதனை மாற்றவே எங்களால் முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து காஞ்சீபுரத்தை சேர்ந்த ஓய்வூதியம் பெற்ற முதியவர் ஒருவர் தெரிவிக்கையில், “பாரத ஸ்டேட் வங்கியில் வரும் ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000 கட்டாயமாக வழங்கப்படுகிறது.

இதனை அதே வங்கியில் கூட டெபாசிட் செய்ய முடியவில்லை. ஏனென்றால் டெபாசிட் செய்ய வங்கியில் உள்ள மிஷின்களில் 10 ரூபாய் நாணயத்தை டெபாசிட் செய்வதற்கான வழிமுறை இல்லை எனக் கூறுகின்றனர்.

வங்கியில் கேட்டால் ஓய்வூதியதாரர்களுக்கு மட்டு மின்றி அரசு அதிகாரிகள் அனைவருக்கும் 10 ரூபாய் நாணயங்களை வழங்கியே ஆகவேண்டும் என்று மேலிடத்து உத்தரவு என்று கட்டாயமாக திணிக்கிறார்கள்.

வயதான காலத்தில் இந்த 10 ரூபாய் நாணயத்தை பெற்றுக்கொண்டு மாற்ற இயலாமல் அவதிப்பட்டு வருகிறோம். பல இடங்களில் வாங்க மறுக்கின்றனர்.

உடல் நிலை சரியில்லாமல் மருந்துக்கடைக்கு மாத்திரைகள் வாங்கி விட்டு 10 ரூபாய் நாணயங்களை கொடுத்தால் கடைக்காரர் வாங்கவில்லை. இதனால் எங்களுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது” என்று தெரிவித்தார். #tamilnews

Similar News