செய்திகள்

காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் கஞ்சா செடி வளர்ப்பு - காவலாளி கைது

Published On 2018-02-05 12:49 IST   |   Update On 2018-02-05 12:49:00 IST
காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் கஞ்சா செடி வளர்க்கப்பட்ட விவகாரம் பக்தர்களுக்கு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் காந்திரோடில் அமைந்துள்ளது வழக்கறுத்தீஸ்வரர் கோயில். இந்த கோயிலுக்கு சென்று யாகம் செய்தாலோ அல்லது எள்விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டாலோ வழக்குகளில் இருந்து விடுபட முடியும் என்பது நம்பிக்கை.

இதனால் வடஇந்திய, தமிழக அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரமுகர்களும் வந்து யாகங்களும் சிறப்பு பூஜைகளும் செய்து வருவதால் இக்கோயில் மேலும் பிரசித்திபெற்றது.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆயிரம் கணக்காண பக்தர்கள் வந்து தீபம் ஏற்றி வழிபட்டு செல்வார்கள். இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் கோவில் வளாகத்தில் கஞ்சா செடி வளர்கப்பட்டு வருவதாக விஷ்ணுகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தார். நேற்று மாலை கோயிலுக்கு சென்று போலீசார் அதிரடி ஆய்வு செய்தனர்.

அப்போது கோயில் வளாகத்தில் அமைந்துள்ள குளக்கரையில் உடைக்கப்பட்ட பிளாஸ்டிக் குடத்தில் மண்ணை நிரப்பி அதில் கஞ்சா செடி வளர்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையில் கோயிலை ஒட்டி அமைந்துள்ள துணிக்கடையில் காவலாளியாக வேலை பார்த்து வரும் சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் கஞ்சா செடி வளர்த்தி வந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

வேறு எங்காவது வளர்த்தால் மாட்டி கொள்வோம் என்று பயந்து கோயிலுக்குள் கஞ்சா செடி வளர்த்து பயன்படுத்தியதாக மூர்த்தி கூறி உள்ளார்.

Similar News