துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னை விமானத்தில் கடத்திய ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்
ஆலந்தூர்:
துபாயில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த சினேகா என்பவரை அதிகாரிகள் சோதனை செய்த போது 9 தங்க வலையல்கள் ஆடையில் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.
இதையடுத்து சினேகாவை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த கமல் ஜித்சிங்கை சோதனை செய்ய போது ஆடையில் மறைத்து வைத்திருந்த ½ கிலோ தங்க நகை சிக்கியது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம். கமல் ஜித்சிங்கை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதே போல் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளிடம் சோதனை நடத்தினர். சென்னையை சேர்ந்த மொய்தீன்கான் என்பவர் 3 தங்க கட்டிகள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம். அவரையும் கைது செய்து தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.