காஞ்சீபுரம் அருகே விவசாயி வெட்டி கொலை
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த மாமல்லநல்லன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன், விவசாயி. இவரது மனைவி லட்சுமி.
இளங்கோவனுக்கு காஞ்சீபுரத்தை அடுத்த கூரம் பெரியகரும்பூர் கிராமத்தில் 15 ஏக்கர் நிலம் உள்ளது. நேற்று இரவு நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்ப வில்லை.
இந்த நிலையில் இளங்கோவன் தலையில் வெட்டுக் காயத்துடன் தனது நிலத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதை பார்த்த கிராம மக்கள் பாலுசெட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இளங்கோவன் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இளங்கோவனுக்கும் அவரது தாய்மாமன் சந்தியப்பனுக்கு கூரம் பெரியகரும்பூரில் உள்ள நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதையடுத்து சந்தியப்பனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.