செய்திகள்

பஸ் கட்டணம் உயர்வு எதிரொலி: ஒரு வாரத்தில் 2 கோடி வருமானம் அதிகரிப்பு - தெற்கு ரெயில்வே

Published On 2018-01-29 19:59 GMT   |   Update On 2018-01-29 19:59 GMT
தமிழகம் முழுவதும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக, கடந்த ஒரு வாரத்தில் ரெயில்வேக்கு கூடுதலாக 2 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. #BusFareHike
சென்னை:

தமிழகம் முழுவதும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக, கடந்த ஒரு வாரத்தில் ரெயில்வேக்கு கூடுதலாக 2 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 19-ம் தேதி பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தியது. பஸ் கட்டண உயர்வு அதிகமாக இருப்பதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. போராட்டம், எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு நேற்று முன்தினம் திடீரென பஸ் கட்டணத்தை குறைத்துள்ளது.

இதற்கிடையே, பஸ் கட்டண உயர்வை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ரெயில் சேவையை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரெயில்களில் பொதுமக்கள் அதிகமாக பயணிக்க தொடங்கினர்.
 
சென்னையில் பஸ் கட்டண உயர்வை அடுத்து மின்சார ரெயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மின்சார ரெயில்களில் நிற்ககூட இடமில்லாமல் பயணிகள் பயணம் செய்யும் நிலையும் காணப்படுகிறது. ரெயில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் ரெயில்வேக்கு கூடுதலாக வருவாய் கிடைத்து உள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் ரெயில்வேக்கு 2 கோடி ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், சென்னை புறநகர் ரெயிலில், ஜனவரி 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 7.95 லட்சம் பயணிகள் ரெயில்களில் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். இந்த வகையில் ரெயில்வே துறைக்கு கடந்த ஒரு வாரத்தில் கூடுதலாக ரூ.1.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளனர். #BusFareHike #tamilnews 
Tags:    

Similar News