அரசு விரைவு பஸ்களில் 57 சதவீத கட்டண உயர்வு 9 சதவீதமாக குறைந்தது
சென்னை:
அரசு பஸ்களின் கட்டணம் கடந்த 20-ந் தேதி உயர்த்தப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு பிறகு பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
கட்டணத்தை குறைக்க கோரி மாணவர்கள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தில் சிறிய அளவினை தமிழக அரசு குறைத்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நீண்ட தூரம் இயக்கப்படும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் 57 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது.
குளிர்சாதன பஸ்களில் 55 சதவீதம் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இது தவிர இன்சூரன்ஸ் மற்றும் சுங்க கட்டணம் என ரூ.100-க்கு ரூ.3 வீதம் ரூ.500-க்கு ரூ.10 சேர்த்து வசூலிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் 9 சதவீதமும், குளிர்சாதன பஸ்களில் 7 சதவீதமும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் அரசு விரைவு பஸ்களில் 48 சதவீத கட்டண உயர்வு தற்போது நடைமுறையில் உள்ளது.
மாநகரம் மற்றும் நகரங்களில் இயக்கப்படும் பஸ்களில் 80 சதவீத கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. அதாவது குறைந்தபட்ச கட்டணம் ரூ3 ஆக இருந்தது ரூ5 ஆக உயர்த்தப்பட்டது. இது தவிர ஒரு ரூபாய் இன்சூரன்ஸ் கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
தற்போது நகர பஸ்களில் ஒரு ரூபாய் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணமாக இருந்த ரூ.5 இப்போது ரூ.4 ஆக மாற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இது 40 சதவீத கட்டண உயர்வாகும். மாநகர பஸ்களை தான் அதிகளவில் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதுவும் சென்னையில் மாநகர பஸ் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. பஸ் கட்டணம் குறைக்கப்பட்டதன் முலம் மாநகர பஸ்களில் மக்கள் இனி அதிகளவு பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கட்டண உயர்வுக்கு பிறகு பஸ்களில் கூட்டம் குறைந்ததால் வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.
கட்டண உயர்வால் எதிர் பார்த்த அளவிற்கு வருவாய் கிடைக்காததால் மாநகர பஸ் கட்டணத்தை அரசு குறைத்துள்ளது.
மாநகர பஸ்களில் குறைந்த பட்சமாக உயர்த்தப்பட்ட ரூ.5 கட்டணம் தற்போது ரூ.4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாநகர பஸ்களில் 80 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதனால் பெரும்பாலான பஸ்கள் காலியாக ஓடின. தற்போது 40 சதவீதம் அளவிற்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிற சாதாரண பஸ்களில் குறைந்த பட்ச கட்டணமாக தற்போது ரூ.4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பஸ்களில் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.9 வசூலிக்கப்பட்டது.
அது ரூ.6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. டீலக்ஸ் பஸ்சிற்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.13 கட்டணம் தற்போது ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
வால்வோ ஏ.சி. பஸ் களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.51 வசூலிக்கப்படுகிறது.
அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணமாக ரூ.1 தற்போது வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு டிக்கெட் டுடனும் ஒரு ரூபாய் சேர்த்து புதிதாக வசூலிக்கப்படுகிறது.
விபத்து இன்சூரன்சுக்காக வசூலிக்கப்பட்ட இந்த கட்ட ணம் தற்போது சாதாரண பஸ்களுக்கு மட்டும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மற்ற எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ் களுக்கு வசூலிக்கப்படுகிறது.