செய்திகள்
அங்கன்வாடி குழந்தைகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் உணவு வழங்கினார்.

ஊழலுக்கு யாரும் துணைபோகக்கூடாது: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

Published On 2018-01-29 12:56 IST   |   Update On 2018-01-29 12:56:00 IST
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊழலுக்கு யாரும் துணை போகக்கூடாது என பேசினார்.
மதுரை:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 51-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார்.

துணை வேந்தர் செல்லத்துரை ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். அமைச்சர் கே.பி.அன்பழகன், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி விமலா ஆகியோர் பேசினர்.

306 மாணவ-மாணவிகளுக்கு முனைவர் பட்டங்களையும், முதல் மதிப்பெண் பெற்ற 78 மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.

மாணவர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஊழல் செய்பவர்களுக்கும், நியாயமற்றவர்களுக்கும் யாரும் துணைபோகக் கூடாது. இதுகுறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இது எனது பணிவான வேண்டுகோள் ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை செயல்படுத்தினார்.

அவரது ஆட்சியின்போது 65 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டது. அம்மா செய்த பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செய்து வருகிறது.

தற்போது 8 அரசு கலைக்கல்லூரிகளும், 3 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் இதுவரை 76 அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு கல்விக்கு குறிப்பாக பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் கல்வியில் முன்னேறி உள்ளது.

தமிழகத்தில் அரசு கலைக்கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்றார்.

பின்னர் கவர்னர் பல்கலைக்கழகம் அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதிக்கு வந்தார். அங்குள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு உணவு வழங்கினார். அதன் பின்னர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த பசுமை வீடுகள் திட்டம் குறித்த கண்காட்சியை பார்வையிட்டார். தூய்மை பாரதம் குறித்த விழிப்புணர்வு ரதத்தையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். #Tamilnews

Similar News