செய்திகள்

ரெயிலில் கள்ள நோட்டு-துப்பாக்கிகள் கடத்தல்: புழல் சிறையில் இருக்கும் ரபீக் கைதாகிறார்

Published On 2018-01-29 11:18 IST   |   Update On 2018-01-29 11:18:00 IST
சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 லட்சம் கள்ள நோட்டுகள், 5 துப்பாக்கிகளை கடத்தியது தொடர்பாக புழல் சிறையில் இருக்கும் ரபீக் கைது செய்யப்படுகிறார்.
சென்னை:

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 லட்சம் கள்ள நோட்டுகள், 5 துப்பாக்கிகளை கடத்தி வந்த பிரதீப், கமல் ஆகிய இருவரும் கடந்த 26-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புழல் சிறையில் இருக்கும் ரபீக் என்ற கைதியே இதற்கு திட்டம் போட்டு கொடுத்தது தெரிய வந்தது. ஜெயிலில் இருந்தபடியே செல்போன் மூலமாக ரபீக் உத்தரவுகளை பிறப்பித்ததும் தெரிய வந்தது.

கைதான பிரதீப், கமல் இருவரும் அளித்த வாக்கு மூலத்தில் ஏற்கனவே 2 முறை இதே போன்று கள்ள நோட்டுகளையும், துப்பாக்கிகளையும் கடத்தி வந்ததாக தெரிவித்தனர்.

இது போன்று கடத்தி வரப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை இந்த கும்பல் சென்னையில் புழக்கத்தில் விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரபீக் சொல்வதை கேட்டு மட்டுமே செயல்பட்டதாகவும், இதன் பின்னணி குறித்து ரபீக்கிடம்தான் கேட்க வேண்டும் என்று இருவரும் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து புழல் சிறையில் இருக்கும் ரபீக்கிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இந்த வழக்கில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதீப், கமல் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கள்ள நோட்டு, துப்பாக்கி கடத்தல் வழக்கில் ரபீக்கை முக்கிய குற்றவாளியாக சேர்க்க திட்டமிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ரபீக் கைது செய்யப்படுகிறார்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கின்றனர். இதன் பின்னரே ரபீக்கை போலீசார் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர். அவரை 4 நாட்கள் வரையில் காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். #tamilnews

Similar News