செய்திகள்

மும்பையில் இருந்து கள்ளத் துப்பாக்கிகளை கடத்தினேன்: போலீஸ்காரர் பரமேஸ்வரன் வாக்குமூலம்

Published On 2018-01-28 07:29 GMT   |   Update On 2018-01-28 07:29 GMT
மும்பையில் இருந்து ரெயில் மூலம் கள்ளத் துப்பாக்கிகளை கடத்தி வந்தேன் என்று போலீஸ்காரர் பரமேஸ்வரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை:

இதுதொடர்பாக அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆதி என்பவர் மூலமாக மும்பையை சேர்ந்த சந்தோஷ் என்பவர் அறிமுகமானார். கள்ளத் துப்பாக்கிகளை அவரிடம் சென்றுதான் நான் வாங்கினேன். பின்னர் இந்த துப்பாக்கிகளை சென்னைக்கு ரெயிலில் கடத்தி வந்தேன். கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே இந்த துப்பாக்கிகளை விற்பனை செய்ய திட்டமிட்டு காய் நகர்த்தினேன். திருச்சியில் வைத்து விற்பனை செய்ய முடிவு செய்தோம். இந்த துப்பாக்கிகள் இரண்டையும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு வாங்கி வந்தேன். நல்ல லாபத்தில் விற்பனை செய்வதற்காக காத்திருந்தார். அதற்குள் சிக்கிக் கொண்டோம்.

இவ்வாறு பரமேஸ்வரன் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பரமேஸ்வரன் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

சென்னையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் பரமேஸ்வரனுக்கு பழக்கமானார். வெளி மாநிலத்தில் இருந்து வாங்கும் துப்பாக்கிகளை ரூ.1 லட்சம் வரை விற்று வந்துள்ளனர்.

இதற்கு ஆட்டோ ஓட்டி வந்த தனது உறவினரான நாகராஜையும் பரமேஸ்வரன் உதவியாக வைத்துக் கொண்டார். இவர்கள் துப்பாக்கி தேவைப்படுகிறவர்களுக்கு அந்த ஊருக்கே சென்று விற்று வந்துள்ளனர். இவர்களுடன் பிடிபட்ட பட்டுக்கோட்டை திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த சிவா, சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

இதில் இவர் பைனான்ஸ் செய்த பணம் பல இடங்களில் திரும்பி வரவில்லை. இத்தொழிலில் தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி வாங்க வந்த போது பரமேஸ்வரன், நாகராஜூடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 வருடங்களாக பரமேஸ்வரன் சென்னை, கோவை, நாகை, மதுரை உள்பட பல இடங்களில் கள்ள துப்பாக்கிகளை விற்று வந்துள்ளார்.

கள்ள துப்பாக்கி விற்று வந்த பரமேஸ்வரன் அடிக்கடி குடித்து விட்டு ரகளை செய்தது, ரவுடிகளுடன் சேர்ந்து அடிதடியில் ஈடுபடுவது என இருந்து வந்துள்ளார். இதற்காக ஒருமுறை போலீஸ் பணியில் இருந்து சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் பணியில் சேர்ந்து தொழிலை யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். விரைவில் பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் கள்ள நோட்டு கும்பலுடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். மும்பை, உள்பட வெளி மாநிலங்களில் இருந்து துப்பாக்கிகளை கடத்தி வந்து ரவுடிகள், கடத்தல்காரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தேவைப்படுவோர்களுக்கு விற்று வந்துள்ளார். கடந்த 5 வருடங்களாக இவர்கள் தொழிலை எந்த தடையும் இன்றி செய்து வந்துள்ளனர்.

கள்ள துப்பாக்கி கும்பலை திருச்சிக்கு வரவழைத்து அவர்களிடம் துப்பாக்கி விலைக்கு வேண்டும் என நடித்து ஏமாற்றி மடக்கினர். கைதான பரமேஸ்வரன், நாகராஜ், சிவா ஆகிய 3 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News