செய்திகள்

திருப்புவனம் அருகே இன்று பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல்

Published On 2018-01-23 06:37 GMT   |   Update On 2018-01-23 06:37 GMT
பஸ் கட்டண உயர்வால் அதிருப்தி அடைந்த பாப்பன் குளம் கிராம மக்கள் இன்று காலை மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை:

தமிழகம் முழுவதும் பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து நகர் பகுதிகளுக்கு வேலைக்கு வருவோர் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு ஒரு நாளைக்கு பஸ் கட்டண மாக 100 ரூபாய் ஆகிறது.

எனவே பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான பாப்பன்குளம், திருப்பாச் சேத்தி, மடப்புரம், பூவந்தி, இடைக்காட்டூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மதுரை மற்றும் சிவகங்கை நகர்களுக்கு சென்று வருகின்றனர்.

பஸ் கட்டண உயர்வால் அதிருப்தி அடைந்த பாப்பன் குளம் கிராம மக்கள் இன்று காலை மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழக அரசை கண்டித்தும், பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புவனம் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News