செய்திகள்
அறந்தாங்கியில் பாத்திரக்கடையில் ரூ.1 லட்சம் பணம்-ரூ.50 ஆயிரம் பொருட்கள் கொள்ளை
அறந்தாங்கி பஸ் நிலையம் அருகே உள்ள பாத்திரக்கடையில் பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பஸ் நிலையத்தின் பின்புறம் பழைய ஸ்டேட் வங்கி சாலையில் அப்பாஸ் (வயது 40) என்பவர் பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் மனித நேய மக்கள் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.
அதிர்ச்சி அடைந்த அப்பாஸ் உள்ளே சென்று பார்த்த போது அங்கு கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள் டி.வி. உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போயிருந்தன.
நள்ளிரவில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இதனை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பாஸ் கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மக்கள் நெருக்கம் மிகுந்த எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும் பஸ் நிலையத்தின் பிற்புறம் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே நேற்று இரவு அறந்தாங்கியை அடுத்த அரசர்குளம் பகுதியில் பெண்ணை கட்டிப்போட்டு 54 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. #tamilnews