திருப்பத்தூர் அருகே டாக்டர் வீட்டில் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ரெயில் நிலைய ரோட்டை சேர்ந்தவர் கண் டாக்டர் சாமுவேல் சந்திரசேகர். இவர் அதே பகுதியில் கண் கிளினிக் நடத்தி வருகிறார்.
சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு தனது குடும்பத்தாருடன் நேற்று முன்தினம் சென்றார்.
கிளினிக் ஊழியர்கள் நேற்று காலை டாக்டர் வீட்டுக்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.
உள்ளே இருந்த கிரில் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் முகப்பில் உள்ள கண்காணிப்பு கேமிரா மீது கருப்புத் துணி போர்த்தப்பட்டிருந்தது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், திருப்பத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அதில் கண் டாக்டர் வீட்டில் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்து அங்கு பீரோவை உடைத்துள்ளனர்.
அதிலிருந்த ரூ.25 லட்சம் மற்றும் 50 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை அள்ளி சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.
இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் விசாரித்தனர். மேலும் அங்கிருந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். டாக்டர் வீட்டில் நுழைந்ததும் மர்ம நபர்கள் வீட்டு முன்பு இருந்த கேமராவை கருப்பு துணியால் மூடியுள்ளனர். கருப்பு துணியில் மூடும் நபர் கேமராவில் பதிவாகியுள்ளார்.
மேலும் வீட்டில் கொள்ளையடிக்கும் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்துள்ளனர் அவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.