சென்னை விமான நிலையம் முடங்கியது: 2 விமானங்கள் ரத்து
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடும் புகை மூட்டம் நிலவியது. இதனால் விமான ஓடு தள பாதை தெரியாதபடி புகை சூழ்ந்து இருந்தது.
இதையடுத்து விமானங்கள் புறப்படுவது, தரை இறங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை வெளி நாடுகளில் இருந்து விமானங்கள் சென்னைக்கு வரும்.
கடும் புகை மூட்டம் காரணமாக சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் புறப்பட முடியவில்லை. இதேபோல் துபாய், பக்ரைன், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. அதனால் விமானங்கள் பெங்களூர், ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.
கத்தார் மற்றும் சார்ஜா செல்ல இருந்த 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதே போல் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
புகை மூட்டத்தால் நள்ளிரவு முதல் சென்னை விமான நிலையம் முற்றிலும் முடங்கியது. ஆனால் சுமார் 3 ஆயிரம் பயணிகள் அவதி அடைந்தனர். அவர்கள் காத்திருப்போர் அறையில் அமர்ந்து இருந்தனர். 10 மணிக்கு மேல் புகை மூட்டம் குறைந்த பிறகு விமானங்கள் ஒவ்வொன்றாக இயக்கப் பட்டன. 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவை 6 மணி நேரம் பாதிக்கப்பட்டது. #smoginchennai #flightscanceled #tamilnews