தாம்பரம் அருகே 500 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது
தாம்பரம்:
தாம்பரம், ஜோதி நகர் பகுதியில் இன்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் பெரிய அட்டை பெட்டிகளுடன் சென்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் வைத்திருந்த அட்டை பெட்டியை சோதனை செய்த போது, தடை செய்யப்பட்ட குட்கா, மற்றும் புகையிலை கடத்தி சென்றது தெரிந்தது.
விசாரணையில் அவர்கள் லோடு ஆட்டோவில் குட்காவை கடத்தி வந்ததும், வரும் வழியில் ஆட்டோ பழுதானதால் அதில் இருந்த புகையிலை, குட்கா பெட்டிகளை மோட்டார் சைக்கிள் மூலம் கடைகளுக்கு சப்ளை செய்து வந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து லோடு ஆட்டோவுடன் சுமார் 500 கிலோ குட்கா, புகையிலை மற்றும் ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் குன்றத்தூரை சேர்ந்த மகேந்திரன், முடிச்சூர் கலீல், தாம்பரம் ரிஸ்மான் என்பது தெரிந்தது. அவர்களிடம், தடை செய்யப்பட்ட குட்கா கிடைத்தது எப்படி? எங்கு சப்ளை செய்யப்படுகிறது? என்று தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.