செய்திகள்

ஈரோடு - திருப்பூர் உள்பட 4 மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

Published On 2018-01-09 21:16 IST   |   Update On 2018-01-09 21:16:00 IST
ஈரோடு, திருப்பூர் உள்பட 4 மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு கோவை திருப்பூர் மற்றும் நாமக்கல் போன்ற மாவட்டங்களில் நெசவுத் தொழில் பிரதானமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 6 மாத காலமாக பட்டு நூல் விலை வரலாறு காணாத வகையில் விலை ஏறியதால் இத்தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர்.

சத்தியமங்கலத்தில் கைத்தறி பட்டு நூல் ஜவுளி உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் டி.ஜி.புதூர் நால்ரோடு சதுமுகை, தொட்டம் பாளையம், புளியம்பட்டி, காங்கேயம், அந்தியூர். தவுட்டுப்பாளையம், சிறுமுகை புதூர், பவானி கொமாரபாளையம், ஒண்டிப்புதூர் உள்பட ஊர்களிலிருந்து 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வரும் ஜனவரி 15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நெசவுத் தொழில் செய்வோர், சாயம் போடுதல், பாவு வீசுதல், சேலை விற்பனை உள்பட அனைத்தும் நிறுத்தப்படும் என முடிவு செய்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 4 மாவட்ட கைத்தறி நெசவாளர்களும் ஈடுபடுகிறார்கள். கூட்டத்தில் கைத்தறி பட்டு நூல் ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி செயலாளர் ரங்கராஜ், பொருளாளர் துரைசாமி, மற்றும் ஆனந்தக் குமார். சதுமுகை ஆறுமுகம். சண்முகம். ஆனந்த் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News