செய்திகள்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் 2-வது நாளாக வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி

Published On 2018-01-03 17:06 IST   |   Update On 2018-01-03 17:06:00 IST
சத்தியமங்கலம் வனப்பகுதியில் இரண்டாவது நாளாக இன்று வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஆண்டுக்கு 2 தடவை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். நேற்று முதல் சத்தி புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை, ஆசனூர், கேர்மாளம் மற்றும் தாளவாடி ஆகிய வனச்சரகங்களை சேர்ந்த 230 வனத்துறை ஊழியர்கள் இந்த பணியில் ஈபட்டு வருகிறார்கள்.

இவர்கள் 5 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து காட்டுக்குள் புகுந்து வனவிலங்குகளின் கால்தடம், அதன் எச்சத்தை அளவீடு செய்கிறார்கள். நீர்நிலைகளில் பதிவாகி உள்ள கால்தடத்தை வைத்தும் கணக்கிட்டு வருகிறார்கள். ஜி.பி.எஸ். கருவி, ரேஞ்ச் வைண்டர், காம்பஸ் உதவி மற்றும் முதன் முதலாக ஆண்ராய்டு மொபைல் செயலி மூலம் வனவிலங்குகளின் கணக்கெடுப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று காலை 6 மணிக்கு வனத்துக்குள் நுழைந்த வனக்குழுவினர் மாலை 6 மணிக்கு வெளியே வந்தனர். இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) 2-வது நாளாக வனக்குழு படையினர் அடர்ந்த காட்டுக்குள் புகுந்தனர்.

வரும் 8-ந்தேதி வரை இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறும். நேற்று முதல் எடுத்த கணக்கெடுப்பில் ஏராளமான யானைகள், காட்டெருமைகள் மற்றும் சிறுத்தை, கரடிகளை நேரில் கண்டதாக வனக்குழுவினர் தெரிவித்தனர்.

Similar News