செய்திகள்

குரங்குகளுக்கு தக்காளி பழங்களை உணவாக போட்டு செல்லும் அவலம்

Published On 2018-01-02 15:29 GMT   |   Update On 2018-01-02 15:29 GMT
விளைச்சல் அதிகரித்த காரணத்தால் மார்க்கெட்டிற்கு கொண்டு சென்ற தக்காளியை திம்பம் மலைப்பாதை பகுதியில் உள்ள குரங்குகளுக்கு உணவாக விவசாயிகள் கொட்டி சென்றனர்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக எதிர் பார்த்த விலை கிடைக்காததாலும் வாங்வதற்கு ஆளில்லாததாலும் கொண்டுசென்ற தக்காளியை குரங்குகளுக்கு உணவாக கொட்டி சென்றனர்.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்படுகிறது.

இங்கு விளையும் தக்காளி சத்தியமங்கலம், கோபி, ஈரோடு, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தினசரி காய்கறி மார்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தக்காளி அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளதால் விளைச்சல் அதிகரித்த காரணத்தால் கடுமையாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. காய்கறி மார்க்கெட்டில் கிலோ ரு.5-க்கு விற்பனையாகும் தக்காளியை வியாபாரிகள் விவசாயிகளிடம் ரு.1.50 முதல் ரு.2 வரை விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர்.

இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். செடியிலிருந்து தக்காளியை பறிப்பதற்கு கூலி கொடுக்க முடியாமல் தவித்து வரும் விவசாயிகள் தாங்களே நேரடியாக கொண்டு விற்பனை செய்யலாம் என முடிவெடித்து சரக்கு ஆட்டோவில் தக்காளியை விற்பனை செய்வதற்காக கோவை மற்றும் திருப்பூர் மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு எதிர் பார்த்த விலை கிடைக்காததாலும் தக்காளியை வாங்க ஆளில்லாததாலும் கொண்டுசென்ற தக்காளியை திம்பம் மலைப்பாதை 3-வது கொண்டை ஊசி வளைவு அருகே குரங்குகளுக்கு உணவாக கொட்டி சென்றனர்.
Tags:    

Similar News