செய்திகள்

உரக்கடைகளில் விற்கப்படும் பூச்சிமருந்துகளை கள ஆய்வு செய்ய வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2017-12-29 15:05 GMT   |   Update On 2017-12-29 15:05 GMT
உரக்கடைகளில் விற்கப்படும் பூச்சி மருந்துகளை கள ஆய்வு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் லட்சுமிபிரியா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன் பேசியதாவது:-

புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமைக்கருவேலமரங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி- வரத்து வாய்க்கால்களை வரும் கோடை காலத்திலாவது தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரக்கடைகளில் விற்கப்படும் பூச்சி மருந்துகளை வேளாண்குழுவினர் கள ஆய்வு செய்து அதன் பயன்பாடு குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாய நகை கடன், கிணறு வெட்டக்கடன் தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பருத்தி வயலுக்கு பூச்சிமருந்து அடிக்கும் போது இறந்த கல்லக்குடி ராமர், கருவிடச்சேரி திருப்பதி ஆகியோரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், பல்வேறு விவசாயம் சார்ந்த கோரிக்கைகள் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினர். விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஷ்வரி, இணை இயக்குனர் (வேளாண்மை) அய்யாசாமி, இணைப்பதிவாளர் (கூட்டுறவுசங்கங்கள்) தயாளன், மண்டல இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு துறை) நசீர், துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) அன்புராஜன், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) விஜயலெட்சுமி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

முன்னதாக விவசாயிகள் ராமர், திருப்பதி ஆகியோரது குடும்பத்தினர் கலெக்டரை சந்தித்து நிவாரணம் கேட்டு மனு கொடுத்தனர்.
Tags:    

Similar News