செய்திகள்

ஆர்.கே.நகர் தேர்தலில் தோல்வி: தி.மு.க. குழு விசாரணை

Published On 2017-12-28 09:41 GMT   |   Update On 2017-12-28 09:41 GMT
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து 2-வது நாளாக தி.மு.க. குழுவினர் விசாரணை நடத்தினார்கள். தொகுதி முழுக்க சென்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்து கேட்டு வருகிறார்கள்.

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அத்துடன் டெபாசிட் தொகையும் பறிபோனது. இது தி.மு.க.வில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்.கே.நகரில் தி.மு.க. நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் குறித்து விசாரித்து கட்சித் தலைமைக்கு தகவல் தெரிவிக்கவும், தோல்விக்கான காரணம் குறித்தும் ஆராயவும் கட்சியின் சட்டப்பேரவை கொறடா சக்கர பாணி, தி.மு.க. சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன், துணை செயலாளர் கண்ணதாசன் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகிற 31-ந்தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு இந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் நேற்று ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று விசாரணையை தொடங்கினர். தி.மு.க. வட்டச் செயலாளர்கள், முன்னாள் நிர்வாகிகள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் ஆகியோர் தி.மு.க. தோல்விக்கான காரணங்களை விசாரணை குழுவிடம் தெரிவித்தனர். பலர் எழுத்துப் பூர்வமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு தேவையான உணவு தரப்படவில்லை. அன்றாட செலவுகளுக்கு கூட பணம் தரப்படவில்லை என பலர் புகார் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. மாவட்ட நிர்வாகிகள் மீதும் பலர் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்துள்ளனர்.

இன்று 2-வது நாளாக தி.மு.க. குழுவினர் விசாரணை நடத்தினார்கள். தொகுதி முழுக்க சென்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்து கேட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News