திண்டுக்கல்லில் போதை ஆட்டோ டிரைவரால் பரபரப்பு
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் இருந்து இன்று மதியம் ஒரு ஆட்டோ டிரைவர் போதையில் சென்று கொண்டு இருந்தார். பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்கிக் கொண்டு என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த அரியகுட்டி மனைவி சுமதி (வயது 25) அரசு ஆஸ்பத்திரி அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.
போதையில் ஆட்டோவை ஓட்டிய அவர் சுமதி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார். இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த சுமதியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். போதை ஆட்டோ டிரைவரை சத்தம் போட்டதால் அவர் அங்கிருந்து வேகமாக தப்பி சென்று விட்டார்.
பின்னர் அவர் பழனி ரோடு வழியாக சென்று கோமத் லாட்ஜ் அருகே ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதினார். இதில் ஆட்டோவின் முன் பக்க கண்ணாடி உடைந்து சுக்குநூறானது.
மேலும் ஆட்டோவும் நொறுங்கி சேதமானது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் ஆட்டோ டிரைவரை கீழே இறக்கினர். அவர் தலைக்கேறிய போதையில் ஆட்டோவை ஓட்டி வந்தது தெரிய வரவே சத்தம் போட்டு நகர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதையில் தாறு மாறாக ஆட்டோவை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.