திருமங்கலம் பகுதியில் கோவில்களில் தொடர் திருட்டு: 4 வாலிபர்கள் கைது
பேரையூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிறிய கோவில்களை நோட்டமிட்டு மர்ம கும்பல் கொள்ளையடித்து வந்தது. இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணன் உத்தரவின் பேரில் திருமங்கலம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.
சம்பவத்தன்று தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த 4 பேரிடம் விசாரணை மேற் கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இதில் 4 பேரும் டி.புதுப்பட்டியை சேர்ந்த வெங்கடேசபிரபு (19), ஆலம்பட்டியை சேர்ந்த முனீஸ் என்ற தர்கேஷ், சுந்தரபாண்டியன், மகா பிரபு எனவும் இவர்கள் 35-க்கும் மேற்பட்ட சிறிய கோவில்கள் வீடுகளில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரை கைது செய்து போலீசார் அவர்களிடமிருந்த 20 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.