செய்திகள்

ஆர்.கே நகரில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தது தோல்வியே இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி

Published On 2017-12-25 09:06 GMT   |   Update On 2017-12-25 09:06 GMT
ஆர்.கே நகரில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தது தோல்வி இல்லை எனவும், மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்து தினகரன் வெற்றி பெற்றுள்ளார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
சென்னை:

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, அ.தி.மு.க.வின் உயர் மட்டக்குழுவின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கூடியது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதனையடுத்து, டி.டி.வி தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்களை நீக்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தினகரன் பக்கம் உள்ள மாவட்ட செயலாளர்களான வெற்றிவேல், கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன், முத்தையா, ரங்கசாமி, பார்த்திபன் ஆகியோரின் கட்சி பதவிகள் பறிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

டி.டி.வி. தினகரனும், ஸ்டாலினும் கூட்டுசேர்ந்து இரட்டை இலையை தோற்கடிக்க நினைத்துள்ளனர். அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆர்.கே.நகரில் அதிமுகவுக்கு கிடைத்தது தோல்வியே அல்ல. மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்து தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.

என்று முதல்வர் பேசியுள்ளார்.
Tags:    

Similar News