செய்திகள்

தமிழகத்தில் சுயேட்சையாக நின்று வெற்றிபெற்றவர்கள்

Published On 2017-12-25 14:24 IST   |   Update On 2017-12-25 14:24:00 IST
பல்வேறு காரணங்களால் அரசியல் கட்சியில் இருந்து விலகியவர்கள் தங்களின் சொந்த செல்வாக்கால் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தமிழக தேர்தல் வரலாற்றில் ஏற்கனவே நடந்திருக்கிறது.
சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

பல்வேறு காரணங்களால் அரசியல் கட்சியில் இருந்து விலகியவர்கள் தங்களின் சொந்த செல்வாக்கால் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தமிழக தேர்தல் வரலாற்றில் ஏற்கனவே நடந்திருக்கிறது.

ஆனால் கடந்த சில வருடங்களாக நடந்த இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றிபெற்று வந்துள்ளது. அதை உதாரணமாக காட்டி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதை உடைத்தெறிந்து சுயேட்சையாக களம் இறங்கிய தினகரன் வெற்றி வாகை சூடியுள்ளார்.

கடந்த காலங்களில் தமிழக சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ், தி.மு.க.,அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கட்சித் தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

1957-ம் ஆண்டு கன்னியாகுமரி தொகுதியில் ராமசாமி பிள்ளை ஆலமரம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் ஏ.எஸ்.சுப்புராஜாவும், சாத்தூர் தொகுதியில் எஸ்.ஆர்.நாயுடும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

1980-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் தாரமங்கலம் தொகுதியில் போட்டியிட எஸ்.செம்மலை வாய்ப்பு கேட்டார். ஆனால் எம்.ஜி.ஆர். அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் தாரமங்கலம் தொகுதியில் எஸ்.செம்மலை சுயேட்சையாக போட்டியிட்டார். அவருக்கு விமானம் சின்னம் ஒதுக்கப்பட்டது. தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். அதன்பிறகு அவர் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

1991-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகிய தாமரைக்கனி ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001-ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிட அப்பாவுவுக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் அவர் அந்த தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கி வெற்றி பெற்றார்.

2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட தளி ராமச்சந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார்.

அவர்கள் அனைவருமே பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். இடைத்தேர்தலில் சுயேட்சைகள் வெற்றி பெற்றதில்லை. ஆனால் தினகரன் இடைத்தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

Similar News