செய்திகள்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கையை அறுத்து மனு கொடுக்க வந்த வாலிபரால் பரபரப்பு

Published On 2017-12-18 16:13 IST   |   Update On 2017-12-18 16:13:00 IST
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை கேட்பு முகாமுக்கு மனு கொடுக்க வந்த வாலிபர் கையை கத்தரிக்கோலால் அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு:

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை கேட்பு நாள் முகாம் நடந்தது. ஈரோடு மாவட்ட முழுவதிலும் இருந்து வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மேலும் பலர் தங்கள் குறைகளை எடுத்து கூறினர்.

சத்தியமங்கலம் குமாரபாளையத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 28) என்ற வாலிபரும் மனு கொடுக்க வந்திருந்தார். அவர் தனது வீட்டுமனை பட்டாவை கிராம கணக்கில் பதிவு செய்ய பலமுறை மனு கொடுத்திருந்தாராம். ஆனால் மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில் இன்றும் அதே கோரிக்கையை வலியுறுத்தி ரஞ்சித்குமார் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். வழக்கம்போல் அவரது மனு பெற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் திருப்தி அடையாத ரஞ்சித்குமார் வெளியே வந்தார். கலெக்டர் அலுவலகம் முன்னே தான் கொண்டு வந்திருந்த கத்தரிக்கோலால் கையை வெட்டி அறுத்தார். கையில் இருந்து ரத்தம் கொட்டியது.

பிறகு ரத்தம் சொட்ட சொட்ட மீண்டும் உள்ளே புகுந்து தனது வீட்டுமனை பட்டாவை கிராம கணக்கில் பதிவு செய்ய கோரினார். அவரது கையில் ரத்தம் வடிந்ததை கண்டு அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினர். பிறகு அந்த வாலிபரை சிகிச்சைக்காக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Similar News