செய்திகள்
சத்தியமங்கலம் வனவர் கனிமொழி, டி.என்.பாளையம் வனவர் சூரியா ஆகியோருக்கு வனவர் பிரபாகர் பயிற்சி அளித்தார்

முதன் முதலாக சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் 4 பெண் வனவர்கள்

Published On 2017-12-18 11:50 IST   |   Update On 2017-12-18 11:50:00 IST
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புதியதாக 4 பெண்கள் வனவர்களாக பணியில் சேர்ந்துள்ளனர். சவாலான இப்பணியை சாதித்து காட்டுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.
தாளவாடி:

தமிழக வனத்துறையில் உயர் பதவியில் மட்டுமே பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழக வனத்துறையில் முதன்முறையாக 36 பெண் வனவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் 4 பெண் வனவர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதில் பிரதீபா (தலமலை), சூரியா (டி.என்.பாளையம்) சண்முகவடிவு (ஆசனூர்), கனிமொழி (சத்தியமங்கலம்) ஆகிய வனச்சரகங்களில் பணியில் சேர்ந்து களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இது குறித்து தலமலை பெண் வனவர் பிரதீபா கூறியதாவது:-

தமிழக வனத்துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் வனவர்கள் களப்பணியிலும் சாதித்து காட்டுவோம். காவல்துறை மட்டுமின்றி வனத்துறையும் சவாலான பணியே. இருப்பினும் சிறுவயதில் இருந்து சாதிக்க வேண்டும் என்ற கனவு தற்போது நிறைவேறியுள்ளது. வனவருக்கு பாரஸ்டி படித்திருக்க வேண்டும் என்பதில்லை. விவசாயம், தாவரவியல் ஆகிய பட்டப்படிப்புகள் போதுமானது.

இவ்வாறு அவர் கூறினர்.

மற்ற வனபெண் காவலர்களும் ஆண்களுக்கு இணையாக செயல்பட்டு வனத்தை காப்போம் என்று கூறினர்.

புதியதாக பணியில் சேர்ந்த பெண்வனவர்களை ஈரோடு மண்டல தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன், சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குனர்கள் அருண்லால், பத்மா ஆகியோர் பாராட்டினர்.



பெண்வனவர்களுக்கு களப்பயிற்சி, வாகனத் தணிக்கை, குற்றவாளிகளிடம் விசாரணை நடத்துவது மற்றும் நீர்நிலைகள் ஆராய்தல் போன்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News