செய்திகள்

ஆபாச உரையாடல் வெளியானதால் திருநங்கை வி‌ஷம் குடித்தார்

Published On 2017-12-14 16:26 IST   |   Update On 2017-12-14 16:26:00 IST
ஆபாச உரையாடல் வெளியானதால் மனவேதனை அடைந்த திருநங்கை வி‌ஷம் குடித்து உள்ளார். ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஈரோடு:

ஈரோடு நாடார்மேடு பகுதியை சேர்ந்தவர் சுஷ்மிதா(வயது21). திருநங்கையான இவர் நேற்று வீட்டில் திடீரென வி‌ஷம் குடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இந்த தகவல் கிடைத்ததும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஏராளமான திருநங்கைகள் வந்தனர். நடந்த சம்பவம் குறித்து அவர்கள் கூறியதாவது.-

சுஷ்மிதாவை கடந்த சில நாட்களாகவே மற்றொரு தரப்பை சேர்ந்த திருநங்கைகள் போனில் தொடர்பு கொண்டு தங்கள் குழுவில் இணைய வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். ஆனால் சுஷ்மிதா அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் சுஷ்மிதா ஜாலியாக அவரது தோழிகளுடன் பேசிய உரையாடல், வீடியோவை எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் சமூகவலை தளங்களான பேஸ்மூக், வாட்ஸ்-அப் போன்றவற்றில் வெளியிட்டுள்ளனர்.

இதனால் சுஷ்மிதா மனவேதனையில் இருந்துள்ளார். மேலும் சுஷ்மிதா திருநங்கை என்பதால் அவரது தந்தை இவரை ஏற்கவில்லை. அதனால் நாடார்மேட்டில் ஒரு வாடகை வீட்டில் தனியாக குடியிருந்து வந்தார். அவரது தாய் அவ்வபோது வந்து சுஷ்மிதாவை பார்த்து செல்வார். இந்நிலையில் சுஷ்மிதா சம்பந்தப்பட்ட வீடியோ வெளியானதால் அவர் மனம் உடைந்து வி‌ஷம் குடித்து உள்ளார்.

இது சமந்தமாக போலீசார் புகார் வாங்க மறுக்கிறார்கள். இதனால் திருநங்கைகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து எஸ்.பி.அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்துள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இதற்கிடையே ஈரோடு ஆஸ்பத்திரியில் சுஷ்மிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News