செய்திகள்

அந்தியூர் அருகே உடலில் மண்எண்ணை ஊற்றி இளம்பெண் தீக்குளிப்பு

Published On 2017-12-14 16:16 IST   |   Update On 2017-12-14 16:16:00 IST
உடலில் மண்எண்ணை ஊற்றி இளம்பெண் தீ வைத்துக் கொண்டார். அவர் எதற்காக தீக்குளித்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

அந்தியூர் அருகே எண்ணமங்கலம், விராலிகாட்டூரை சேர்ந்தவர் சங்கீதா (வயது 24). இவருக்கும் மேட்டூரை சேர்ந்த கூலி தொழிலாளி லட்சுமணனுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு பிரதாப் (5) என்ற மகன் உள்ளார். லட்சுமணனுக்கும், சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் லட்சுமணனும், சங்கீதாவும் கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். சங்கீதா தனது மகனுடன் விராலிகாட்டூரில் உள்ள தாய் வீட்டில் வசிக்கிறார்.

லட்சுமணன் மேட்டூரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். அவ்வப் போது விராலிகாட்டூருக்கு வந்து மகன் பிரதாப்பை பார்த்து செல்வாராம்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த சங்கீதா தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடலில் தீப்பற்றிய நிலையில் சங்கீதா அலறி துடித்தார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சங்கீதா ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சங்கீதா எதற்காக தீக்குளித்தார்? என்பது தெரியவில்லை. ஒருவேளை கணவருக்கும், மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு அந்த விரக்தியில் தீக்குளித்தாரா? அல்லது வேறு காரணமா? என்று அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News